திருமாவளவனின் வெளி

வாழ்வின் துயரைப் பாடும் மீன்குஞ்சு நான்.

   

Monday, March 06, 2006

காலத்தின் தேவை..என்னிக்கை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் புகலிடம் பெற்று வாழும் நாடுகளை பட்டியலிட்டால் முதலாமிடத்தில் இருப்பது கனடா. அதிலும் குறிப்பாக தொரன்ரோ நகர் என்று சொல்வதுதான் சாலப்பொருந்தும்.
முதன்முதலில் கனடாவில் காலடியெடுத்து வைத்துப் புகலிடம் கோரிய தமிழன் அல்லது கண்டுபிடித்த தமிழ்கனேடியன் யார் என்பதைப் பற்றி சிந்திப்பதர்க்கு கூட இப்போது கனடாவாழ் தமிழர்க்கு நேரம் கிடைக்காது. அவர்கள் டாலரை நோக்கி, ஓட்டமும் நடையுமாக பிஸியாய் இருக்கிறது.
எண்பதுக்கு பின் தமிழர்கள் ஈழத்தைவிட்டு பெருவாரியாக புலம் பெயரத் தலைப்பட்டாலும் அவர்கள் முதலில் மையங் கொண்டது ஐரோப்பிய நாடுகளில்தான். ஏதாவது ஒரு தரணத்தில் நாட்டுப் பிச்சனை தீர்ந்து போனால் தங்களைத் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற ஐயுறவால் காலா காலத்துக்கும் திருப்பியனுப்பாத புதிய புதிய நாடுகளை தேடத் தொடங்கினர்.
சளைக்காத அவர்களின் நீண்ட தேடல் வேட்டையின் பலனாய் கண்டுபிடிக்கப்பட்ட நாடுதான், இப்பொழுது பட்டியலில் முதலாவது இடத்திலிருக்கும் கனடா.
ஆரம்பத்தில் இவர்கள் மொறியால் நாகரில்தான் தமது வலதுகாலை எடுத்து வைத்தனர். அந்த நாட்களில், கனடாவினுள் அகதிகளை அங்கிகரிக்கும் நாடுகள் பட்டியலில் சிறிலங்கா இருக்கவில்லை.
இப் பட்டியலில் சிறிலங்காவை சேர்த்துக் கொள்வதர்க்காக நீண்டகாலமாகப் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பல கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினர். வெற்றியும் கண்டனர்.
இவர்களது அடுத்த தேடல், ஆங்கில மொழிபற்றியதாக இருந்தது. தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்விபெற வேண்டும் என்பதே அவர்களது பேரவா. அதில் அகப்பட்டதுதான் தொரன்றோ நகர்.
அக்காலத்தில் சீமையில் படித்த மேற்தட்டு தமிழர்கள் ஏற்கனவே இங்கு வாழ்ந்த போதிலும் புகலிடம் கோரிய அகதித்தமிழர்களை கண்டுகொள்ளவே இல்லை.
வடிவேலு பாணியில் ‘வந்திட்டாங்கையா வந்திட்டாங்க…. இங்கையும் வந்திட்டாங்க’ எனப் பொருமிய பெருங்குடிமக்களே அதிகம்
காலவோட்டத்தில் அள்ளுண்ட வெள்ளத்தில் அடிபட்டுப் போய் இப்போது எல்லாம் ஒரே குளமாயிற்று…. அல்லது குட்டையாயிற்று. கனேடிய தேர்தல் களத்தில் தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான் என மேடைவசனம் பேசுகிற அளவுக்கு நம்மவர் வளர்ச்சி பெருகிவிட்டது.
சங்ககாலத்துக்கு முன்பிருந்து இன்றுவரை தமிழர் தங்களுக்குள் தாங்களே போராடி காலத்தை கழித்தார்களே தவிர, தொடர்ச்சியாக தமிழர் வரலாற்றைப் பதிவு செய்து வைத்ததாக எதுவும் இல்லை. இன்று வரையிலும் எழுந்தமானமாய் வெறும் ஆண்டபரம்பரைக் கோ~மே எழுப்ப முடிகிறது
சிங்கள பௌத்தர்களால் எழுதப்பட்ட மகாவம்சம் ஆண்டாண்டு காலமாக பதிவில் உள்ள போதும் அதில் பல புனைவுகள் என்றே நாம் கருதுகிறோம். எங்கள் காலத்தில் எழுதப்படுகிற பல வரலாற்று நூல்களில், எம் கண் முன்னால் நடந்த வரலாற்றுப் பதிவுகளே புனைவுகளாக இருக்கும் போது, மாகாவம்சம் இருப்பதில் தவறு சொல்ல என்ன இருக்கிறது.
ஈழத்தமிழர் வரலாற்றில் தந்தை செல்வாவுக்குப் பின் வழிநடாத்திய தலைவர்களை எல்லாம் இருட்டடிப்பு செய்து, வரலாறு புனையப்பட்டிரு- ப்பதை தற்போது எழுதப்பட்ட நூல்களில் பார்த்திருக்கிறேன்.
சில தமிழ் நாட்டு பேராசிரியர்களும் தங்கள் ஆய்வுகளுக்கு ஆதாரமாக இந்த நூல்களிலிருந்து எடுகோள்களைக் பின்பற்றுவதையும் காணமுடிந்தது.
கனடாவில் வாரத்துக்கு ஒரு புத்தக வெளியீடு நடைபெறுகிற வேளை, கனடாவில் முதல் காலடி எடுத்த ஈழத்தமிழர்கள் தங்கள்; அனுபவங்களை பதிவுசெய்து வைக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. இது காலத்தின் தேவையும் கூட.
உரிய காலத்தில் செய்யத் தவறினால் ஒர் 500 ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரலாற்றாசிரியர்கள் “ஈழத்தின் மாமன்னன் முதலாம் சூரியத்தேவன் காலத்தில் தன் திறைசேரியை நிரப்புவதர்க்காக பாரிய மரக்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களின் வம்சாவழியே கனேடியதமிழ்ச் சமூகம்” என எழுதினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

3 Comments:

At 3:50 PM , Blogger நற்கீரன் said...

நல்ல பதிவு. மிகவும் ஈடுபாட்டுடன் வாசித்தேன்.

தமிழ் விக்கிபீடியாவில் (http://ta.wikipedia.org/wiki) கனேடியத் தமிழர்கள் பற்றியோ, பிற வரலாற்று தகவல்களையோ, அல்லது வேறு உங்களுக்கு விரும்பிய தலைப்புக்களிலோ சற்று விடய நோக்கில் பதிந்தீர்கள் என்றாலும் நன்று.

நன்றி.

 
At 4:27 PM , Blogger வசந்தன்(Vasanthan) said...

///உரிய காலத்தில் செய்யத் தவறினால் ஒர் 500 ஆண்டுகளுக்குப் பிற்பாடு வரலாற்றாசிரியர்கள் “ஈழத்தின் மாமன்னன் முதலாம் சூரியத்தேவன் காலத்தில் தன் திறைசேரியை நிரப்புவதர்க்காக பாரிய மரக்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களின் வம்சாவழியே கனேடியதமிழ்ச் சமூகம்” என எழுதினால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.///

;-)

 
At 12:05 AM , Blogger சூரியாள் said...

தங்களது வலைப்பூ நன்கு அமைந்திருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.. வாசிக்க ஆவலாய் இருக்கின்றோம்

 

Post a Comment

<< Home